முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தக் கோரி முல்லைத்தீவு மீனவர்களால் இன்று (10) போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து வெளியிடுகையில், “கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை நாம் அறிவோம். விரைவில் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் “கடல் வளத்தை பாதுகாக்க வேண்டிய அரசே ஏன் கடல் வளத்தை சுரண்ட துணை நிக்கிறாய்”, “கடற்படையினரே சட்டவிரோத வெளிச்சம் உன் கண்களுக்கு தெரியவில்லையா”, “அரசே சட்டவிரோத தொழிலுக்கு துணைபோகாதே” போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.