யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலை விடுதியில் மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை நாளை(29) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 மாணவிகள், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியால் கடந்த 3 வருடங்களாக அகப்பை காம்பு, தடி, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென தம்மை சித்திரவதை செய்வதாக தெரிவித்து நேற்றையதினம்(27) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், சரணடைந்திருந்தனர்.
சித்திரவதை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் முறையிட்டும், பலனில்லாத நிலையில், நேற்று 11 மாணவிகளும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில் குறித்த 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவநாதனின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து , மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த 11மாணவிகளும்
ஊர்காவற்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.