அரியாலை சனசமூக நிலையம் யாழ்.மாவட்ட ரீதியில் நடாத்தும் அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் பலம் மிக்க பாடுமீன் அணியை வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு ஊரெழு றோயல் அணி தகுதி பெற்றுள்ளது.
இன்று (28) மாலை இடம்பெற்ற நான்காவது காலிறுதிப்போட்டியில் யாழ்.மாவட்டத்தில் மிகப்பலம் பொருந்திய அணிகளான ஊரெழு றோயல் அணியும் குருநகர் பாடுமீன் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் ஆரம்ப முதல் இரு அணிகளும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தின. ஆயினும் ஊரெழு றோயல் அணியின் வழமையான அதிவேக ஆட்டத்தை இன்று மைதானத்தில் காணக்கூடியதாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் போட்டி சமனிலையில் முடிவடைய, வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கு வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பில் றோயல் அணி வெற்றி கொண்டு அரையிறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பினை பெற்றுள்ளது.
நாளைய தினம் இடம்பெறும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் றோயல் அணியை எதிர்த்து ஞானமுருகன் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
பல இறுதிப்போட்டிகளில் களம் கண்ட இரண்டு அணிகளும் பல மாதங்களின் பின்னர் அரையிறுதிப் போட்டியில் மோதுவதால் ரசிகர்கள் திரண்டு வருவார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.