யாழ் மாநகரசபையின் அசண்டையீனத்தால் உயிர்க்கொல்லி நோய்கள் பரவும் அபாயம்!
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட கண்ணாதிட்டி காளி கோவில் முன்பாக உள்ள குளத்தில் ‘ஆகாயத்தாமரை’ எனும் தாவரம் குளத்தில் முழுமையாக படர்ந்துள்ளது. இத் தாவரம் படர்ந்து பரவுவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் நிலவுவதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
அத்துடன் குளத்தில் வெற்றுப் போத்தல் உள்ளிட்ட குப்பை கூழங்கள் வீசப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் இதனாலும் நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மலேரியா நோய்த் தொற்றுடன் பலர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் பெரிய நீர்த் தேக்கம் ஒன்றே நுளம்புகள் பெருகும் அபாயத்துடன் யாழ் மாநகரசபை எல்லைக்குள் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் யாழ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் குறைந்து வரும் சூழ்நிலையில் குறித்த குளத்தினைச் சுற்றி வசிக்கும் சிலர் குளத்தின் சில பகுதிகளை படிப்படியாக நிரவி வருவதாகவும் யாழ் மாநகரசபையில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் குளத்தினை முழுமையாக மீட்டு சுத்தப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நோய்த்தொற்று நிலையைக் கருத்திற்கொண்டு குளத்தினை சுத்தப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு யாழ் மாநகரசபைக்கு உள்ளது என சுட்டிக்காட்டப்படுகிறது.