வந்தோரை வரவேற்கின்ற பண்பாடு எமது இனத்தினுடையது என்பதற்கிணங்கவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்றேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் காலம் நெருங்குகிறது. அந்த வகையிலேயே எனது இல்லம் நாடி தற்போதைய ஜனாதிபதியும் ஜனாதிபதிவேட்பாளரும் ஆகிய ரணில் விக்கிரமசிங்க எனது இல்லம் நாடி வந்தார்.
இதற்கு முன்னர் சஜித் பிரேமதாஸ, அனுர குமார போன்றவர்களும் எமது கட்சியின் ஆதரவு வேண்டி கட்சித் தலைமையகத்தில் சந்தித்தார்கள். அவர்களுக்கு நாம் எமது இனத்தின் இருப்பு தொடர்பாகவும், எமது மக்களின் அபிலாஷைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து அதை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குமாறு தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்திருந்தோம்.
அதற்காக அவர்களுக்கு ஆதரவு என்று பொருள்படாது. இந்தத் தேர்தலில் எங்களுடைய மக்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ன அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அதற்காக எங்களுடைய கட்சி ரீதியான கொள்கை, எங்களுடைய இனப்பிரச்சினை தீர்வு, சமஷ்டி, சுயநிர்ணய அடிப்படையிலான தீர்மானங்கள், அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வேட்பாளராக உள்ள சஜித் பிரேமதாஸவின் கருத்துக்கள் தேர்தல் அறிக்கை விடயங்களையும் நாங்கள் கருத்தில் கொண்டு, அதில் எங்களுக்கும் அவருக்கும் இணக்கம் ஏற்படக்கூடிய விடயங்களை அடையாளப்படுத்தி நாங்கள் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிக்கு முன்னதாக எங்களால் தயாரிக்கப்பட்ட ஓர் அறிக்கையை பொதுமக்களுக்காக வெளியிடவுள்ளோம்.
நான் ஒருபோதும் மாறுபட்ட கருத்துக்களை கூறவில்லை. நான் ஆரம்பத்தில், நான் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களது தீர்மானத்திற்கான விளக்கம் எனக்கு என்ன என்று தேவைப்பட்டிருந்தது.
ஆகவே கட்சியினுடைய பயணம், மக்களுடைய பலம், ஜனநாயக ரீதியாக வாக்களிக்கின்ற போது நாங்கள் தேவைப்பட்ட திருத்தங்களை செய்து இறுதியாக ஓர் அறிக்கையை தயாரித்து வெளியிடுவது எங்களுடைய தேர்தல் சம்பந்தமான அறிக்கையாக இருக்கும்.
அது தொடர்பில் தற்போது கூறுவதற்கு தயார் இல்லை. நாம் இன்று பேசியதற்கு தொடர்ச்சியாக அடுத்த கூட்டத்திலும் கலந்துரையாடுவோம்- எனத் தெரிவித்தார்.
