ஜனாதிபதித் தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமது கூட்டணியை பலப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய குடியரசு முன்னணின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. நாளை புதன்கிழமை இதற்கான நிகழ்வு இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இந்த நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட ரிசாத் பதியூதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்க உள்ளது.
தடுமாற்றத்தில் இருந்த ரிசாத் பதியுதீன் பல்வேறு ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவும் ரிசாத் பதியூதீனுடன் பல்வேறு ரகசிய பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால், இறுதி முடிவாக சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு அவர் வந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. இந்த அறிவிப்பு நாளை வெளிப்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.