ஜனாதிபதித் தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
”ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் காணப்படுகின்றன. அரசியலமைப்பின் ரீதியாக , சட்ட ரீதியாக அதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 அல்லது 6 வருடங்களா என்பது தொடர்பிலான சிக்கலுக்கு தற்போது 22 வது திருத்த சட்டமூலத்திற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அது எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து 2/3 பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை அமுல்படுத்துமாறு உத்தரவிடப்படும்.
நீதிமன்ற உத்தரவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நிச்சயமாக இணங்க வேண்டும். அதன் காரணமாகவே வாய்ப்புகள் இருப்பதாக கூறினேன்.
அவ்வாறு 2/3 பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியாமல் போனால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கான வாய்ப்பும் , அதிகாரமும் ஜனாதிபதியிடம் உண்டு.
ஜனாதிபதி தேர்தலை ஒத்தி வைப்பதற்கான வாய்ப்புகள் நூற்றுக்கு 50 வீதம் உள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பில் எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது உறுதி.” எனத் தெரிவித்தார்.