யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களை தயாரித்து வைத்தியர் என தன்னை அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர், யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து அதிசொகுசு கார் ஒன்றும், 15 பவுண் நகைகளும், 5 இலட்சம் ரூபா பணமும், 5 கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கனடாவில் உள்ள ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட குறித்த சந்தேக நபர் வைத்திய மேற்படிப்புக்காக புலமைப்பரிசில் கிடைத்துள்ளது என்றும், அதனால் வெளிநாடு செல்லவுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நம்பிய கனடா வாசி கனடாவில் இருந்து உண்டியல் பண பரிமாற்றம் மூலமும், வங்கிக் கணக்கு ஊடாகவும் ஒரு கோடியே 42 இலட்சம் ரூபா பணத்தினை அனுப்பி வைத்துள்ளார்.
அதன் பின்னரே, குறித்த சந்தேக நபர் அனுப்பி வைத்த காணி ஆவணங்கள் போலியானவை என்பதை அறிந்துகொண்ட கனடாவைச் சேர்ந்தவர்கள் குறித்த சம்பவம் தொடர்பில்
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவந்த நிலையில், சந்தேகநபர் நேற்று (03) யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவ சேவை மேற்கொள்கின்றேன் என தெரிவித்து வெளிநாடுகளில் உள்ள பலரிடம் பணம் பெற்றுள்ளார் என்றும் தெரியவருகிறது.