நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை சீரின்மை காரணமாக தென்னிலங்கையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், பாரிய இடர்களும் ஏற்பட்டுள்ளன.
சீதாவக்க பிரதேச செயலகப் பிரிவில் ஏற்பட்ட அனர்த்தத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 11 கிராம உத்தியோகத்தர் பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், அவிசாவளை புவக்பிட்டிய தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் மேலும் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொஸ்கம தொடக்கம் அவிசாவளை வரையான ஹைலெவல் வீதியில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், புவக்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மேலும், தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக மண் சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அக்குரஸ்ஸ பிரதேச செயலகப் பிரிவில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளனர்.