இலங்கையின் முன்னணி நடிகையான பியுமி ஹன்சமாலிக்கு நெருக்கமானவர்களின், சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
பியுமி ஹன்சமாலி மீது சுமத்தப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துகுவிப்பு வழக்குதொடர்பில் அறிக்கை வழங்குமாறு கடந்த 19ஆம் திகதி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.
விசாரணைகளை ஆரம்பித்துள்ள திணைக்களமானது, முக்கிய வருமான ஆதாரமாக குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவருக்கு நெருக்கமானவர்களின், சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பியுமி ஹன்சமாலி மீது தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சஞ்சய் மஹவத்த தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி விசாரணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்த்திருந்தது.
கொழும்பு தனியார் குடியிருப்பில் 148 மில்லியன் ரூபாய் பெறுமதியான குடியிருப்பை வாங்கியமை, அதிசொகுசு வாகனங்களை கொள்முதல் செய்தமை, மற்றும், எட்டு வங்கிகளில் பராமரிக்கப்பட்டு வந்த 19 வங்கி கணக்குகள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை வைப்பு செய்துள்ளமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.