அரியாலை சனசமூக நிலையம் யாழ்.லீக்கின் அனுமதியுடன் வடமாகாண ரீதியாக நடத்தி வந்த அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் பிரமாண்ட இறுதிப்போட்டி இன்று (09) இடம்பெறவுள்ளது.
இன்றைய இறுதிப்போட்டி அரியாலை சனசமூக நிலைய கழக மைதானத்தில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
48 கழகங்கள் பங்கு பற்றிய இறுதிப்போட்டியில் யாழ்.மண்ணின் அசுர பலம் கொண்ட அணிகளான ஊரெழு றோயல் அணியும், இளவாலை யங்கென்றீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
றோயல் அணி முதலாவது போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுரம் அணியையும், காலிறுதிப் போட்டியில் குருநகர் பாடுமீன் அணியையும், அரையிறுதிப் போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் அணியையும் வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
யங்கென்றிஸ் அணி முதலாவது போட்டியில், பாசையூர் சென் அன்ரனிஸ் அணியையும், அரையிறுதிப் போட்டியில் இளவாலை சென்லூட்ஸ் அணியையும் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
குறித்த தொடரில் சம்பியனாகும் அணிக்கு 250000 ரூபாவும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 150000 ரூபா பிரமாண்ட பணப்பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.