பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் சூறையாடல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் சூறையாடப்பட்டமை தொடர்பில் பிரதமரின் பணிக்குழாம் பிரதானியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டாரவிடம் நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக உதித் லொக்குபண்டார மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பணம் மோசடி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதமரின் நெருங்கிய உறவினர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பணம் பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் கொடுப்பனவாக பெற்றுக்கொண்ட பணம் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் உள்ள நிலுவைப் பணம் தொடர்பில் எழுந்த சந்தேகத்தை அடுத்து மேற்கொண்ட ஆய்வில் பல ஆண்டுகளாக பணம் ஏடிஎம் அட்டை ஊடாக பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த ஏடிஎம் அட்டை உதித் லொக்குபண்டாரவிடம் இருந்தமை தெரியவந்துள்ளது.
உதித் லொக்குபண்டார முன்னாள் சபாநாயகர் வி ஜே எம் லொக்குபண்டாரவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.