மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இளம் குடும்பபெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று குறித்த செய்தி பரவலாக காணப்படுகின்றது. வெறுமனே இதனை ஒரு செய்தியாகவோ, ஒரு தகவலகாவோ கடந்து விடமுடியாது. குறித்த செய்தியின் உயிர்ப்பு நிலை பற்றி இன்றைய செய்திப்பார்வை அலசுகிறது.
குறித்த சம்பவமானது நடைபெற்று ஒருமாதகாலத்தை கடந்துள்ளது. 27 வயதுடைய அண்மையில் குழந்தையை பிரசவித்த தாயொருவர் தாயொருவர் இரத்தப்போக்கு காரணமாக இரவு நேரத்தில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த பெண் மறுநாள் உயிரிழந்திருந்தார். குறித்த இறப்பு தொடர்பில் அவருடைய கணவரால் பகிரங்க குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
வைத்தியர்களின் அசமந்தபோக்கே குறித்த பெண்ணின் இறப்புக்கு காரணமென பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டது.
எனினும், குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த வைத்தியசாலையின் நிர்வாகம் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் எவ்வித விளக்கத்தையும் வழங்காது சம்பவத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்க்கொண்டதாக மக்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில், மக்கள் பிரதிநிதிகளோ, சமூக செயற்பாட்டாளர்களோ, வைத்தியர்களோ வாய்திறக்காக நிலையில், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் அர்ச்சுனா குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயத் தொடங்கினார்.
இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையிலேயே மக்களும் ஒன்று திரண்டு எழுச்சிப் போராட்டங்களை மேற்க்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்க்கொள்ளப்படும் என மன்னார் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்த நிலையில், குறித்த சம்பவம் தொடரபில் ஒரு வைத்தியர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் குறித்த பெண்ணின் மரணம் வைத்தியர்களில் அலட்சியத்தாலும், காட்டுமிராண்டித்தனமான போக்கினாலுமே இடம்பெற்றதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெறுமனே ஒரு வைத்தியரின் பணி நீக்கம் குறித்த பெண்ணின் மரணத்திற்கு தீர்வாக முடியுமா என மக்கள் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
போன உயிர் திரும்ப வருமா? ஒரு குழந்தை அநாதையாக நிற்கின்றது இதற்கெல்லாம் யார் பொறுப்பு? என மக்கள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.
அப்பாவி பெண்ணொருவை வைத்தியர்கள் சேர்ந்து கொலை செய்துவிட்டு விதண்டாவாதம் கதைக்கிறார்கள் எனவும் மக்கள் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு கண்துடைப்பு தண்டனைகள் வழங்குழதை விட்டுவிட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அத்தனை பேருக்கும் தகுந்த தண்டனை வழங்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
அப்போதுதான் அப்பாவி மக்களின் உயிரை பலிக்கடாக்கும் வைத்தியர்களை ஒருவழிக்கு கொண்டுவரமுடியும். அத்துடன் இன்னும் பல சிந்துஜாக்கள் அழிந்து போவதை காப்பாற்ற முடியும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
வடமாகாணத்தின் வைத்தியத்துறையில் பல்வேறு விமர்சனங்கள், ஊழல், பாலியல், அசமந்தபோக்கு என பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும் எச் சம்பவம் தொடர்பிலும் இதுவரையில் எவ்வித தகுந்த விசாரணைகள மேற்கொள்ளப்படவும் இல்லை, எவருக்கும் தண்டனைகள் வழங்கப்படவும் இல்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
எது எவ்வாறாக இருப்பினும் வைத்தியர்கள் இறைவனுக்குச் சமம் என்று நினைத்தே மக்கள் வைத்தியசாலைக்குச் செல்கின்றனர். எனவே வைத்தியர்களும் மக்களை மக்களாக மதித்து தகுந்த வைத்தியம் மேற்க்கொள்வதே அவர்களின் தொழிலின் தர்மமாகும்.
இன்றும் எத்தனையோ பல வைத்தியர்கள் மக்களுக்காக இரவு பகல் பாராது தங்களால் இயன்ற அர்ப்பணிப்பான வைத்தியசேவையையும் ஆற்றி வருகின்றார்கள். சில வைத்தியர்கள் செய்யும் தவறை காரணமாக கொண்டு மக்களுக்காக பணியாற்றும் நல்நோக்கம் கொண்ட வைத்தியர்களைக் குறை கூற முடியாது.
எனவே, இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதை தடுப்பதற்கு அனைத்து வைத்தியர்களும் சிறப்பான் வைத்திய சேவை வழங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.