நாட்டின் அரசியிலில் தற்போது பெரும் பேசுபொருளாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்புகளுக்கு தற்போது முடிவு வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில்,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், இளம் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தயோகபூர்வ இல்லத்தில் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் குறித்த அறிவிப்பு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறித்த அறிவிப்பினை ஊடகங்கள் முன்பாக வெளியிட்டிருந்தார்.
குறித்த நிகழவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சஉள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை தனிப்பட்ட காரணங்களால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடப்
போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நேற்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தினையும் தம்மிக்க பெரேரா கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாக
கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி, மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2020ஆம் ஆண்டு தொடக்கம் 2022 ஆண்டு வரை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ பணியாற்றியிருந்தார்.
தற்போது இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்த வயதுடைய ஜனாதிபதி வேட்பாளர் என்ற பெருமையை நாமல் ராஜபக்ச தனதாக்கிக்கி கொண்டுள்ளார்.